Friday, November 11, 2011

குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியைச் சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள்!



Rajnikanth
சென்னை: குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பதும் பாதிப்புக்குள்ளாவதும் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலிருந்தே சத்தான உணவுகளைத் தருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாடு தழுவிய பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

இதற்காக மக்களின் அபிமானம் பெற்ற முன்னணிக் கலைஞரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த அமைச்சகம் கைகோர்க்கிறது. இந்தி நடிகர் ஆமீர்கானும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

எண்பதுகளில் போலியோ ஒழிப்புப் பிரச்சாரத்துக்கான விளம்பரப் படத்தில் நடித்த ரஜினி, அதன் பிறகு இப்போது மீண்டும் குழந்தைகளுக்கான முக்கிய விளம்பரப் படத்தில் நடிக்கிறாரா. வட இந்திய நகரங்களில் அவர் இதுகுறித்து பிரச்சாரம் செய்யவும், கருத்தரங்குகளில் பங்கேற்கவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த பிரச்சாரத்தை எப்படி மேற்கொள்வதென ஆலோசனை செய்வதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் நேற்று ரஜினியைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியை நேற்று எங்கள் அமைச்சக உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினார்கள். அவரது ஒவ்வொரு வார்த்தையும் சர்வதேச அளவில் மக்களை வேகமாக சென்றடையும் சக்தி மிக்கவை. அவர் உண்மையான சாதனையாளர். அவர் எங்களுடன் இணைந்து செயல்படும்போது, இந்த பிரச்சாரத்துக்கே புதிய வேகம் கிடைத்துவிடும்," என்றார்.