Friday, November 18, 2011

அய்யனாருக்கு கிடாவெட்டி, பூஜை போட்டு பாரதி ராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் தொடங்கியது!



பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் தேனி அல்லி நகரத்தில் இன்று தொடங்கியது. கொட்டும் மழையிலும் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து படத்துக்கு வாழ்த்து தெரிவித்தது.

பாரதிராஜாவின் குலதெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து இந்த படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

தொடக்கவிழாவுக்கு, இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், கலைப்புலி தாணு, பி எல் தேனப்பன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

படத் தொடக்கவிழாவையொட்டி, அல்லி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாரதிராஜாவின் உறவினர்கள், பக்கத்து ஊர்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் விழா நடந்தது. காலையிலிருந்தே மழை விட்டுவிட்டு பெய்தாலும், விழா தடையில்லாமல் நடந்து முடிந்தது.