Tuesday, November 15, 2011

பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் ‘மயங்கினேன் தயங்கினேன்’



Mayanginen Thayanginen Movie
தாய்மண் திரையகம் தயாரிக்கும் முதல் படம் ‘மயங்கினேன் தயங்கினேன்’.'இன்பா' படத்தை இயக்கிய எஸ்டி வேந்தன் இயக்கும் படம் இது. தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுவர் எஸ் டி வேந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அவலத்தை தோலுரிக்கும் படமாக மயங்கினேன் தயங்கினேன் வருகிறது.

இந்தப் படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ‘தமிழ்ப் படம்’ புகழ் திஷா பாண்டே. இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

ரேணிகுண்டாவில் நடித்த சஞ்சனா சிங் ஒரு அட்டகாசமான குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார். கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாப் பாடல் இது. பாபி நடனம் அமைத்துள்ளார்.

மயங்கினேன் தயங்கினேன் இசையை ‘தமிழ் படம்’ கண்ணன் அமைத்துள்ளார். யுகபாரதி, விவேகா, இளையகம்பன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

மயங்கினேன் தயங்கினேன் படத்தின் ஒளிப்பதிவை ராமேஸ்வரன் கவனிக்க, போக்கிரி உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய வி பிரபாகர் வசனத்தை எழுதியுள்ளார்.

படத்தொகுப்பு - உதயசங்கர், கலை – பி எல் தேவா. தாய்மண் திரையகம் சார்பில் ராஜேஸ்வரி வேந்தன் தயாரிக்கிறார்.

நான்கு இளைஞர்களைச் சுற்றி நடக்கிறது கதை. இதுகுறித்து இயக்குநர் எஸ்டி வேந்தன் கூறுகையில், “சென்னை நகரில் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நான்கு இளைஞர்கள், அவர்களின் ஆசைகள், கனவுகள், காதல் மற்றும் உணர்வுகளை மிக அழகான திரைப்படமாக்கியிருக்கிறோம்.

வெறுமனே காதல், நண்பர்கள் அரட்டை என்று இல்லாமல், ஒரு சமூகக் கருத்தை இந்தப்படத்தில் வலியுறுத்தியுள்ளோம். சென்னை சூழலில் வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளோம்.

மொத்தம் 5 பாடல்கள். மிக அருமையாக வந்துள்ளன. சஞ்சனா சிங் ஆடும் குத்துப் பாடல் இந்த ஆண்டில் இளைஞர்களின் மனம் கவர்ந்த பாடலாக அமையும். றிவரும் ரசனை, இளைஞர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப இந்தப் படம் உருவாகியுள்ளது. காதல்-நகைச்சுவை-சமூக அக்கறை என அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக வருகிறது மயங்கினேன் தயங்கினேன்,” என்றார். 

அப்படியென்ன சமூகக் கருத்தைப் புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, இயக்குநர் வேந்தன் சொன்ன விஷயம் உண்மையிலேயே அதிர வைத்தது.

“நானே நேரில் பார்த்த ஒரு விஷயம்தான் இந்தப் படத்தை எடுக்க உந்துதலாக அமைந்தது. ஒரு பெண்கள் மனநல காப்பகம் அது. கணவனை இழந்த ஒரு பெண்ணையும் அவரது வயதுக்கு வந்த மகளையும் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியாத அளவு பாலியல் கொடுமை அங்கே நடந்துள்ளது. எதிர்த்துக் கேட்கப் போனவர்களையும் விரட்டியனுப்பினர். எங்களிடம் விஷயத்தைச் சொன்னபோது, நாங்களே நேரில் போய், கதவை உடைத்து அந்தப் பெண்களை மீட்டு வந்தோம்.

இப்படி எத்தனையோ மனநல விடுதிகளில் பெணகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அரங்கேறி வருவதை பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத்தான் இந்தப் படத்தில் நேர்மையாக படம்பிடித்துள்ளோம். இதன்மூலம், எல்லா மனநல விடுதிகளுமே தவறானவை என்று நாங்கள் சொல்ல வரவில்லை. உண்மையிலேயே சேவை உள்ளத்தோடு காப்பகங்கள் நடத்திவருபவர்களையும் நாம் அறிவோம். அவர்களை நாம் குறை சொல்லவில்லை,” என்றார் எஸ்டி வேந்தன்.