Friday, November 18, 2011

இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா




Aannakodiyum Kodiveeranum
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.

தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன்.

இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளில் என்னை என் பகுதி மக்களும், பள்ளித்தோழர்களும் வரவழைத்து விழா நடத்தவில்லை என்ற கோபம்தான் காரணம்.

இப்போது இந்த படத் தொடக்க விழாவின் மூலம் நானே என்னை வரவழைத்துக் கொண்டேன். நான் இங்கிருந்து சினிமாத்துறைக்கு சென்று அங்கிருந்து சினிமாவை இங்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

அன்னக்கொடியும் கொடி வீரனும் ஒரு மனிதனின் 60 ஆண்டுகால வாழ்க்கையைச் சொல்லும் படம். ஐம்பதுகளில் தொடங்கும் இந்தப் படம் இந்த சமகாலம் வரை நடந்த நிகழ்வுகளின் நெகிழ்ச்சியான பதிவு. இது எனது 49வது படம். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு பதிவாக இருக்கும்.

இயக்குநர் அமீர் கட்டுவிரியன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் லட்சுமணன் என்ற இளைஞரை, என் நண்பனின் மகனை அறிமுகப்படுத்துகிறேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இளைஞன் அவன். அன்னக்கொடியாக, நான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். ராதா மகளை மட்டுமல்ல, கார்த்திகா மகளையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்னொரு முக்கிய வேடத்தில், மல்லாங்கிணறு மங்காதாத்தா என்ற பாத்திரத்தில் இனியா நடிக்கிறார். மீனாள், பாண்டி ஆகியோரும் முக்கிய வேடமேற்றுள்ளனர். மற்ற பாத்திரங்கள் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

குற்றப்பத்திரிகை படத்தின் கதைதான் இந்த அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையா?

குற்றப்பரம்பரை கடந்த ஏழு ஆண்டுகளாக நான் சொல்லிவரும் படம். அந்தக் கதை பலரும் அறிந்தது. அதை எடுக்கத் தேவையான ஒவ்வொரு விஷயங்களாக சேகரித்து வருகிறேன். எனது அடுத்த படைப்பாக குற்றப்பரம்பரை வரும்.

பார்த்திபன் - அமீர் விவகாரத்தில் நடந்தது என்ன?

என்னடா இன்னும் கேக்கலையேன்னு பார்த்தேன். நீங்க நெனக்கிற மாதிரி எதுவும் நடக்கலை. பார்த்திபன் நல்ல நடிகர். மிக வித்தியாசமான சிந்தனைக்காரன். அவனது திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் கிடைக்கவில்லை என்பேன். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை, இந்த மண்ணின் மைந்தனாக வாழ வேண்டும். பார்த்திபன் அதை செய்துவிடுவார்தான். ஆனால் அதற்கு முன்பயிற்சி தேவை.

ஆனால் அமீரைப் பார்த்ததும், இந்த வேடத்துக்காகவே பிறந்தவன் மாதிரி தெரிந்தது. அதனால் அவரை தேர்வு செய்துவிட்டேன். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. எனவே பார்த்திபனுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைக்காமல், அமீரையே நாயகனாக்கிவிட்டோம். இது பார்த்திபனுக்கும் தெரியும். நானே அவரிடம் பேசிவிட்டேன்.

அமீரின் அர்ப்பணிப்பு உணர்வு, அந்தப் பாத்திரமாகவே மாறிப் போகும் தீவிரத்தன்மை எனக்கு பிடித்துவிட்டது. கருத்துவேறுபாடுகளைத் தாண்டி நாங்கள் இணைந்தது அதனால்தான்.

நான் என்ன சொன்னாலும் அப்படியே செய்கிறார் அமீர். ஒரு நாள் அவரது உடல் அமைப்பையே இந்தப் படத்துக்காக வேறு ஷேப்புக்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அடுத்த இரண்டு நாட்களில் நான் பார்த்த அமீர், என் கதைக்கு தேவையான அளவு மாறியிருந்தார்.

அதனால்தான் அமீரைத் தேர்வு செய்தேன்.

உங்கள் பட ஹீரோக்கள் இருவருமே கறுப்பு நிறமுடையவர்கள். ஆனால் ஹீரோயின்கள் மட்டும் சிவப்பாக இருப்பது ஏன்?

அது ஒண்ணுமில்லை... மேக்கப்தான். அதை கழுவிட்டா அவங்களும் ஒரே நிறம்தான்!

இது பீரியட் படமா....

அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா அப்படி சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. பீரியட் படம் என்றால் 400 வருஷத்துக்கு முந்தைய கதையாக இருக்க வேண்டும்.

இது ஒரு 60 ஆண்டு கால வாழ்க்கைப் பதிவு. நான் வாழ்ந்த வாழும் காலத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன். இது எப்படி பீரியட் படமாகும்?

இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணையாதது ஏன்?

எத்தனை முறை இதற்கு பதில் சொல்வது... இந்தப் படத்தில் அவருடன் இணைவேன் என்று எப்போதாவது சொன்னேனா... ஒரு கட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு எனக்கு வேறு அனுபவங்கள் தேவைப்பட்டது. அதனால் ரஹ்மான், தேவா, ஜீவி பிரகாஷ் என மாறினேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. இன்னொன்று இதுபற்றி நானும் இளையராஜாவும் அல்லவா பேச வேண்டும்... மீடியா ஏன் பேசுகிறது!

ஆனால் உங்கள் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - பாரதிராஜா இணைந்தபோது வந்த பாடல்களின் தரம் வேறு படங்களில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இணைவார்களா என எதிர்ப்பார்க்கிறார்கள்... இந்தக் கேள்வி அடிக்கடி பிறக்கிறது...

அதற்குக் காரணம், சின்ன வயதில் அந்தப் படங்களைப் பார்த்து பாடல்கள் கேட்டதால் வரும் உணர்வுதான். அந்தப் பாடல்கள் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ரசிகர்களுக்கு. ஏன்... நானும் ரஹ்மானும் இணைந்த கிழக்குச் சீமையிலே பாடல்கள் நன்றாக இல்லையா... கருத்தம்மா பாடல்கள் எப்படி...

இன்னொன்று வெற்றிபெற்ற ஜோடி, பிரிந்த பிறகு மீண்டும் இணைந்தால் அதே வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எம்எஸ்வி பண்ணாத சாதனைகளா? ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகும் எம்எஸ்வி பெரிய வெற்றிகளைக் கொடுத்தார். ஆனால் மீண்டும் இணைந்தபிறகு அவர்களால் அந்த வெற்றியைத் தர முடிந்ததா?

சின்ன வயதில் அம்மாவோடு நெருக்கமாக இருப்போம். பிரியமுடியாமல் ஒட்டிக் கொண்டே இருப்போம். ஆனால் வயது ஏற ஏற புதிய உறவுகளைத் தேடுவதில்லையா... அதுபோலத்தான்.

இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் இந்த சமூகத்துக்கு...

இதுவரை நான் என்ன சொல்லியிருக்கிறேன்... அதேதான் இந்தப் படத்திலும்!

-இவ்வாறு பாரதிராஜா பதிலளித்தார்.

-தேனியிலிருந்து நமது சிறப்பு நிருபர்..