Thursday, December 29, 2011

அட்டகத்தி - சென்னையின் புறநகர வாழ்க்கையை மையப்படுத்தி வரும் முதல் படம்!




Attakathi
தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம்.