Thursday, December 15, 2011

அவசரம் என்பதால் ஜீன்ஸ் - டி சர்ட்டில் சாமி கும்பிட்டேன்.. அபராதமும் கட்டிட்டேன்! - தமன்னா




Tamanna
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நான் ஜீன்ஸ் - டிசர்ட்டில் போனது இத்தனை பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. மிக அவசரம் என்பதால் இந்த உடையில் போனேன். இல்லாவிட்டால் சேலை அல்லது சுடிதாரில்தான் போயிருப்பேன், என்றார் தமன்னா.

திருப்பதி கோயிலில் சில தினங்களுக்கு முன் தமன்னாவும் ராம் சரணும் சாமி கும்பிடப் போனார்கள். ஆனால் திருமலை தேவஸ்தான விதிமுறையை மீறி ஜீன்ஸ் - டி சர்ட் அணிந்து போயிருந்தார் தமன்னா.

இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இரு தினங்களுக்குப் பிறகு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் தமன்னா.

அவர் கூறுகையில், "படப்பிடிப்பு இடை வேளையில் திடீரென்று சாமி கும்பிட கூப்பிட்டார்கள். அதனால் போட்டிருந்த உடையோடு சென்றுவிட்டேன். பக்தர்களை இழிவுபடுத்தும் எண்ணம் ஏதுமில்லை. நான் எப்போதுமே கோவில்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் செல்வேன். ஆனால் இப்போது அவசரமாக போனதால் அப்படி செய்யவில்லை.

அங்கு சாமி கும்பிட்ட போது கோவில் நிர்வாகத்தினர் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் சில பத்திரிகைள்தான் இந்த பிரச்சினையை பெரிதுப்படுத்துகின்றன. என் தரிசனத்தை நான் முடித்து கிளம்பி விட்டேன். கோவில் நிர்வாகம் இதற்காக எனக்கு அபராதம் விதித்தது. அதை செலுத்தியும் விட்டேன். அதன் பிறகும் இந்த விவகாரத்தை திரும்ப திரும்ப கிளப்புகிறார்கள்," என்றார்.