Sunday, December 18, 2011

ரஜினி குடும்பத்தை தவறாகப் பேசவில்லை!- கருணாஸ் விளக்கம்




Karunas

சென்னை: ரஜினி பிறந்த நாள் விழாவில் அவரது குடும்பத்தினரைப் பற்றி தான் தவறாக ஏதுவும் பேசவில்லை என்று நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்தார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடிய போது, நடிகர் கருணாஸ் பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சுக்கு ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.

ரசிகர்கள் பெரும் செலவழித்து எடுத்துள்ள இந்த விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும், அவரது வீட்டிலிருந்து யாராவது வந்திருக்கலாம். இது வருத்தத்தைத் தருகிறது, கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

ரசிகர்களின் உணர்வை அப்படியே கருணாஸ் பிரதிபலித்துவிட்டார் என்று நிர்வாகிகள் முதல் ரசிகர்கள் வரை தெரிவித்தனர்.

இந்த நிலையில் விழா நடத்திய சென்னை தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு எதிரணியில் உள்ள சிலரே, ஒரு பத்திரிகையில் கருணாஸைத் திட்டி பேட்டி கொடுத்தனர். ரஜினி குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளதாக பொய்யான தகவலை அந்த செய்தியில் தெரிவித்திருந்தனர்.

இதனால் ரஜினி ரசிகர் மன்றங்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பத்திரிகையில் வந்த தவறான செய்தியால் வருத்தமடைந்த கருணாஸ், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அதனால்தான் அவர் பிறந்த நாள் விழாவுக்கு ரசிகர்கள் அழைத்ததும் போனேன். அவ்விழாவில் ரஜினி குடும்பத்தினரை நான் தவறாக பேசியதாக செய்திகள் வெளியாகி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் பத்தாயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர்.

ரஜினியையோ அவர் குடும்பத்தினரையோ நான் தவறாக பேசி இருந்தால் அவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா? தமிழகம் முழுவதிலுமிருந்து எழுச்சியோடு ரசிகர்கள் வந்து இருந்தார்கள். ரஜினி உடல்நலம் குன்றி இருந்தபோது அவர்கள் கோவில் கோவிலாக மண் சோறு சாப்பிட்டும் மொட்டை அடித்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை செய்தததை ஒரு ரஜினி ரசிகனாக நானும் அறிவேன்.

ரஜினி மீது அவர்கள் வைத்துள்ள அன்பைப் பற்றித்தான் நான் பேசினேன். அந்த அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த விழாவில் ரஜினி குடும்பத்தில் இருந்து யாரேனும் பங்கேற்று இருந்தால், ரசிகர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள்? அதைத்தான் நான் சொன்னேன். ரசிகர்கள் என் பேச்சை கைதட்டி வரவேற்றனர். விழா முடிந்ததும் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

அதன் பிறகு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரஜினி ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்க வருமாறு அழைத்தனர். நான் தவறாக பேசி இருந்தால் கூப்பிட்டிருப்பார்களா?

என் பேச்சில் உள்நோக்கம் கற்பித்து சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். விளம்பரத்துக்காக பேசியதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த செய்தியே இட்டுக்கட்டப்பட்டது என்பதை நான் மட்டுமல்ல, பத்திரிகை நண்பர்களும் அறிவார்கள்.

நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எனக்கு இதுபோல் பேசித்தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைக்கும் விளம்பரம் இல்லாமல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன். குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன்.

ரஜினியை வாழ்த்தி பேசினேனே தவிர தவறாக எதுவும் பேசவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்," என்றார்.