Monday, December 19, 2011

"அய்யா.. நான்தாங்க அந்த பபூன்" - வடிவேலு பரபரப்பு பேச்சு




Vadivelu
நகைச்சுவை கலைஞனான எனக்கும் பிரச்சினைகள் உண்டு. அதனால்தான் நடிக்காமல் அமைதியாக உள்ளேன். அதற்காக வாய்ப்பு வரவில்லை என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். மக்களுக்கு சிரிப்பு காட்டும் பபூனுக்கும் பிரச்சினை இருக்குமல்லவா?, என்றார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை தமிழின் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகரான வடிவேலு. இதுகுறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் வடிவேலு, தான் வேண்டுமென்றே சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதாகத் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், மதுரை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் அரிமா சங்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வடிவேலு பேசுகையில், "அரசியல் மிரட்டல் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதாக சிலர் தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். அது தப்பு. எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன். நானாக எடுத்த முடிவு இது. அதற்கு காரணமும் உள்ளது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகிடுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் கொஞ்சம் பிரச்சினை.

எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.

அந்த பபூன் நாந்தான்...

ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், அய்யா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் இருக்கு. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.

அவரோ, அய்யா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.

சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் அய்யா, சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம நான் மன உளைச்சலில் இருக்கும்போது பக்கத்தில் நடக்கிற ‘பபூன்’ நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் ரெண்டு டிக்கெட் வாங்கி இருக்கேன். வேணும்னா அதுல ஒண்ணை உங்களுக்கு தர்றேன். அந்த பபூன் நிகழ்ச்சியை பார்த்துட்டு வந்தாலே கவலை பறந்து போயிடும்னு சொன்னாராம்.

உடனே இடைமறித்த நோயாளி, 'அய்யா... நான் தாங்க அந்த பபூன்' என்றாராம். உடனே மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். இப்போதைக்கு அந்த ‘பபூன்’ நிலைதாங்க என்னோட நிலையும்," என்றார்.