Wednesday, December 7, 2011

சன் பிக்சர்ஸுடன் சமரசமான திரையரங்க உரிமையாளர்கள்!




Sun Pictures
நீயா நானா என்று முஷ்டி உயர்த்திக் கொண்டிந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கமும் சன் பிக்சர்ஸும் ஒருவழியாக சமாதானமாகிவிட்டனர்.

சன் பிக்சர்ஸ் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ 4 கோடி குறித்து வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதென தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையில், இருதரப்புக்கும் ஒப்பந்தமாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களால் தடை அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாவதில் நீடித்த சிக்கல் விலகியது.

முன்னதாக, "எங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை சன் பிக்சர்ஸ் கொடுக்காததால், அந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் படங்களுக்கும், சன் டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெறும் படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை'' என்று திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 'ஒஸ்தி', மம்பட்டியான் படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் நேற்று தீர்ந்தது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திரையரங்க உரிமையாளர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் உள்ள பிரச்சினை குறித்து, ஜனவரி 31-ந் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முழு ஒத்துழைப்பை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உறுதி தரப்பட்டது. எனவே ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக முழு ஒத்துழைப்பு தருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்று கூறப்பட்டுள்ளது.