Tuesday, December 27, 2011

மன்மோகன் சிங்குக்கும் பிடித்த 'கொலவெறி'... தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!



Manmohan Singh and Danush
ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'. 

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார். 

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. 

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.