நடிகர்கள்: விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா, எஸ் ஜே சூர்யா
சவுண்ட் டிசைன்: ரசூல் பூக்குட்டி
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
திரைக்கதை- ராஜ்குமார் ஹிராணி - அபிஜித் ஜோஷி
வசனம் - ஷங்கர் - கார்க்கி
இயக்கம்: ஷங்கர்
ஒரிஜினலோ.. ரீமேக்கோ... ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும்... நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும்.
அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்து, வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறது ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள நண்பன்.
பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் அல்லது விஷுவல் பிரம்மாண்டங்களுக்காக அறியப்பட்ட இயக்குநர் ஷங்கர், இன்றைய கல்வி முறை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய 3 இடியட்ஸ் இந்திப் படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். அப்படியே என்றால்.... ஒரு காட்சியைக் கூட மாற்றவில்லை. பெயர்களில் கூட அதே உச்சரிப்பு வருவதுபோன்ற ஒற்றுமை... அங்கே வீரு, இங்கே விருமாண்டி... அங்கே பியா, இங்கே ரியா, அங்கே ராஞ்சோ, இங்கே பஞ்சமன்.... ஆனால் இந்தியில் பார்த்தபோது கிடைத்த அதே உணர்வுகளை இந்தப் படம் இன்னொரு முறை தருவதுதான், ஷங்கரின் ஸ்பெஷல்!
குறிப்பா, மாணவர்களை கவலைக்கிடமாக்கும் கல்வி முறையின் அவலங்களை தனக்கே உரிய நக்கல் நடை வசனங்களில் வெளிப்படுத்தும் விதம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே நல்ல பாடம் ('மாணவர்களுக்கு சும்மா பிரஷர் ஏத்திக்கிட்டே இருக்கிறீங்க... காலேஜ் என்ன பிரஷர் குக்கரா?!').
பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா. அதிக மார்க், முதலிடம், நல்ல வேலைதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக நம்பும் பிடிவாத கல்லூரி முதல்வர் சத்யராஜ். இந்த மார்க் சிஸ்டத்தையே அடியோடு வெறுக்கும் விஜய், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இது எத்தனை தவறான கல்வி முறை என்பதை அம்பலப்படுத்த, தன் மாணவனிடம் தோற்ற கோபத்தில், விஜய் மற்றும் நண்பர்களைப் பழிவாங்கும் அளவுக்குப் போகிறார்.
ஒரு கட்டத்தில் தனது சிஸ்டமே தவறு என சத்யராஜைப் புரிந்து கொள்ள வைக்கிறார் விஜய். இடையில் சத்யராஜ் மகள் இலியானாவுடன் காதல்.
கல்லூரி முடிந்த பிறகு திடீரென காணாமல் போகிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்குப் போகிறார்கள் உடன்படித்த நண்பர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் விஜய்யுடன் சவால் விட்டு ஜெயித்த சத்யன். அங்கே விஜய்யின் பெயரில் வேறு யாரோ இருக்கிறார்கள்.
விஜய் என்ன ஆனார்... ஏன் காணாமல் போனார் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்படுகிறார்கள் நண்பர்கள்.
3 இடியட்ஸ் பார்க்காமல், இந்தப் படத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய நிறைவைத் தரும் வகையில் அமைந்துள்ளது ஷங்கரின் அழகான மேக்கிங். ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல், இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்து, தனக்குள் இருந்த நல்ல நடிகருக்கு வேலை கொடுத்திருக்கிறார் விஜய். இருவருக்குமே பாராட்டுக்கள்!
தமிழில் வந்துள்ள முதல் மல்டி - ஹீரோ படம் இதுதான் எனலாம். விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா என அனைவருமே தங்களுக்குரிய வேடங்களை மிக நிறைவாகச் செய்துள்ளனர்.
குறிப்பாக விஜய், இந்தப் படத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகு. ஷங்கர் சொன்னமாதிரி இனி 'விஜய் விமர்சகர்களு'க்கும் அவரைப் பிடிக்கும்! நம்புங்கள்.... படத்தில் ஒரு காட்சியில் கூட பஞ்ச் இல்லை... சண்டை இல்லை... சக நண்பர்களிடம் அடி வாங்குகிறார். ஹீரோயின் அக்காவிடம் கூட அடி வாங்குகிறார்... பிரசவம் பார்க்கிறார்... அனைத்தையுமே ரசிக்கும்படி செய்திருப்பதால் எந்தக் காட்சியும் உறுத்தலாகவே இல்லை!
எப்போதும் ஜிப்பாவும் சிரிப்பற்ற முகமுமாகக் காட்சி தரும் ஜீவாவைவிட, தன் நண்பன் விஜய்யின் செயல்களை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீகாந்தின் பாத்திரம் அழகு. இருவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.
சத்யனுக்கு இந்தப் படம் ஒரு மறுஜென்மம். அவரை வெறும் காமெடியனாக இனி ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சுக்கு தியேட்டர் அதிர்கிறது.
கல்லூரி முதல்வர் வேடத்தில் சத்யராஜ் கலக்கியிருக்கிறார்.
இலியானா இந்தப் படத்தில்தான் இப்படியா... அல்லது எப்போதுமே இப்படித்தானா (தோற்றத்தைச் சொல்கிறோம்) பாடல் காட்சிகளில் மட்டும் பரவாயில்லை... மற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, 'இலியானா இனி வேணா' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ் ஜே சூர்யாவின் பாத்திரம். கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
பாஸிடிவான இந்தப் படத்தின் 'நெகடிவ் பக்கம்' என்று பார்த்தால்... பிற்பகுதியில் வரும் பாடல்கள். இரண்டாம் பாதியை தொய்வடைய வைப்பதில் இந்தப் பாடல்களின் பங்கு பெரிது.
அடுத்து அந்த பிரசவக் காட்சி. என்னதான் லாஜிக்காக பல விஷயங்களை அதில் சேர்த்திருந்தாலும்... நம்ப கஷ்ஷ்ட்டமாக இருக்கிறது. அதேபோல நேர்முகத் தேர்வில் ஜீவா தன் கதை சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் மட்டும்தான் சாத்தியம். அந்த நேர்முகத் தேர்வில் உண்மையைப் பேச ஆரம்பிக்கும்போதே, காட்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
நேரம் ஆக ஆக, இயக்குநரும் பொறுமை இழந்துவிட்டாரோ என்று எண்ண வைக்கும் அளவு படு செயற்கையான அந்த திருமணக் காட்சி...
இந்தப் படத்தின் பாதிக் காட்சிகள் ஏற்கெனவே பல தமிழ்ப் படங்கள் அல்லது ரீமேக் படங்களில் பார்த்த சமாச்சாரங்கள் (வசூல் ராஜா, ஏப்ரல் மாதத்தில், பறவைகள் பலவிதம்...) என்பது இன்னொரு மைனஸ். .
'இவையெல்லாம் இயக்குநரின் தவறில்லை. காரணம் ஒரிஜினல் படத்தை அவர் அப்படியே எடுத்திருக்கிறார்' என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. ஷங்கர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காரணம் அவர் மீது அப்படியொரு அபார நம்பிக்கை இருக்கிறது தமிழ் ரசிகர்களுக்கு!
'அஸ்கு லஸ்கு...' பாடலில் இயக்குநரின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் மனோஜும், இசையமைப்பாளர் ஹாரிஸும் அபாரமாக உழைத்திருக்கிறார்கள்.
வசனங்களில் ஷங்கரின் பிராண்ட் அடிக்கடி எட்டிப் பார்கிறது. கல்லூரியில் பாடம் நடத்தும் காட்சிகளில் கார்க்கியின் பங்களிப்பும் புரிகிறது.
நண்பன் படம் அறிவித்த போது, 'ஷங்கருமா ரீமேக் பக்கம் போய்விட்டார்' என்று நிறையப் பேர் குறைப்பட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களும், ஆஹா நல்லாருக்கே எனும் அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பது ஷங்கரின் செய்நேர்த்திக்கு சான்று. இரண்டரை மணிநேரம் மாணவர் உலகத்தில் ஒரு நெருக்கமான பார்வையாளனாக கூடவே பயணிக்கும் உணர்வைத் தந்திருப்பது, சாதாரண விஷயமா என்ன...
எல்லாம் நன்மைக்கே ஷங்கர்!