ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.
பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை… மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.
பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை… மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.
போலீசே அவர்களை கண்டு நடுங்குகிறது. ரவுடிகள் கடத்தும் குழந்தையை மீட்கும் பொறுப்பை மாதவனிடம் மேலதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். அவருக்கு பதில் ஆர்யா ரவுடிகளுடன் மோதி குழந்தையை மீட்டு கொடுக்கிறார்.
மாதவன்தான் மீட்டார் என நினைத்து சக போலீசார் அவரை கொண்டாடுகிறார்கள். கடத்தல் லாரிகளையும் ஆர்யா மடக்கி மாதவனுக்கு புகழ் சேர்க்கிறார். வெறியாகும் வில்லன்கள் மாதவனையும் ஆர்யாவையும் தீர்த்துக்கட்ட வியூகம் வகுக்கின்றனர். அவர்களுக்கு இருவரும் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்…
லிங்குசாமி, மாதவன், ஆர்யா கூட்டணியில் வந்துள்ள வீரியமான கமர்ஷியல் மசாலா. ஆர்யா ஆக்ஷனில் வெளுத்து கட்டுகிறார். முகத்தை மறைத்த தொப்பியுடன் குழந்தை கடத்தல்காரர்கள் ஏரியாவுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்வது அனல்… ரவுடிகளால் அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் மாதவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரவுடி கும்பல் கூட்டத்தில் புகுந்து அவர்கள் அழிவுக்கு கெடு வைத்து திரும்புவது ஆரவாரம்.
மாதவன் `கோழை’ போலீஸ் அதிகாரி கெட்டப்பில் கலகலப்பூட்டுகிறார். தம்பியின் சாகசங்களை தான் செய்ததாக நம்ப வைத்து பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாவது ரகளை. அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போது தம்பி ஆர்யாவை தாக்கும் ரவுடிகள் மேல் ஆவேசப்பட்டு விழுந்து தடுமாறி எழுந்து நடக்கையில் பாசத்தை கொட்டுகிறார்.
சமீராரெட்டி, அமலாபால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது உண்டு தவிப்பதும் ரசனையான பதிவுகள்.
அமலாபாலுக்கும் ஆர்யாவுக்குமான காதல் கவித்துவ தொகுப்பு. அமலாபாலை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சமீரா மணமுடிக்க முயற்சிப்பதும், அந்த மாப்பிள்ளையை ஆர்யா மடக்கி சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்து தானே மணமகனாவதும் குலுங்க வைக்கும் காமெடி. போலீஸ் அதிகாரி மனைவியாக சமீராரெட்டி மிடுக்கு காட்டுகிறார்.
வீட்டில் புகுந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் கிளைமாக்ஸ் பதட்டப்படுத்துகிறது. அமலாபால் கண்களால் வசிகரிக்கிறார். பாடலில் தாராள கவர்ச்சி. நாசர், தம்பிராமையா சிரிக்க வைக்கின்றனர். சகோதர பாசம், காதல், ஆக்ஷன் கலவையில் திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
அமெரிக்க மாப்பிள்ளை சீன்கள் ஈர்க்க வில்லை. யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை பலமாக இருந்தாலும் பாடல்கள் கவர வில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம். நல்ல `வேட்டை’.