‘சுப்பிரமனியபுரம்’
படத்தின் மூலம் நல்ல இயக்குநராகவும், ‘பசங்க’ படத்தின் மூலம் நல்ல
தயாரிப்பாளராகவும், ‘நாடோடிகள்’, ‘போராளி’ ஆகியப் படங்களின் மூலம் நல்ல
நடிகராகவும் தன்னை அடையாளப் படுத்திகொண்ட இயக்குநர் சசிகுமார், ‘சுந்தர
பாண்டியன்’ படத்தின் மூலம் தன்னை பெண்களுக்கும் பிடிக்கும் காதல் ஹீரோவாக
அடையாளப் படுத்திகொண்டிருக்கிறார்.
எப்போதும் கோவமும், கொதிப்புமாக வலம் வந்த சசிகுமார், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் காதலும், கலகலப்புமாக வலம் வருகிறார்.
நண்பனின் காதலுக்கு உதவப் போகும்
சசிகுமார், தான் காதலித்த பெண்ணை தான் தனது நண்பன் காதலிக்கிறான் என்று
தெரிந்து கொண்ட பிறகும், தனது நண்பனின் காதலுக்காக உதவுகிறார்.
இதற்கிடையில் அதே பெண்ணை வேறு ஒருவன் காதலிக்க இருவருக்கும் இடையே
பஞ்சாயத்து தலைவராகும் சசிகுமார் காமெடியான தீர்ப்பை சொல்ல, அதை விட காமெடி
அந்தப் பெண் சசிகுமாரை காதலிப்பதாக சொல்கிறாள்.
இறுதியில் சசிகுமாருக்காக அவருடைய நண்பன்
வழிவிட, சசிகுமார்-லஷ்மி மேனனின் காதல் வளர்கிறது. இதற்கிடையில் லஷ்மி
மேனனை ஒன் சைடாக காதலிக்கும் அப்புக்குட்டி, தொடர்ந்து லஷ்மி மேனனுக்கு
தொல்லைகொடுக்க, அதை கேட்கப் போகும் சசிகுமாரின் கோஷ்ட்டிக்கும்,
அப்புக்குட்டியின் கோஷ்ட்டிக்கும் ஓடும் பஸ்ஸில் கை கலப்பு ஏற்படுகிறது.
இந்த சண்டையில் அப்புக்குட்டி பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து இறந்துப்
போகிறார். இதனால் சசிகுமார் ஜெயிலுக்குப் போகிறார்.
இதற்கிடையில் அப்புக்குட்டியின்
மரணத்திற்குப் பழிவாங்க சசிகுமாருக்கு அவருடைய நண்பர் ஒருவரே
எதிரியாகிறார். அதே நேரத்தில் லஷ்மி மேனனின் முறை பையனான விஜய் சேதுபதியும்
தனது முறைப் பெண்ணை காதலித்ததற்காக சசிகுமாரை கொலை செய்ய திட்டம்
போடுகிறார். இவரும் சசிகுமாரின் ஒரு நண்பர் தான். இப்படி காதலுக்காக
நண்பர்களையே எதிரிகளாக்கிக்கொண்ட சசிகுமாரை இவர்கள் என்ன செய்தார்கள்?
ஜெயிலில் இருந்து சசிகுமார் வந்தாரா? லஷ்மி மேனனை கரம் பிடித்தாரா இல்லையா?
என்பதுதான் க்ளைமாக்ஸ்.
சசிகுமாரின் முந்தையப் படங்களில் உள்ள
நட்பு செண்டிமென்ட் இந்தப் படத்திலும் இருந்தாலும், இதில் அவர் ஹீரோயினை
விரட்டி விரட்டி காதலிப்பது, நண்பனின் காதலுக்கு துணைபோவது போன்ற
எப்பிசோட்கள் புதுசுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிராமத்து கதையை
நகைச்சுவையும், விறுவிறுப்பும் கலந்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர்
கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில், பஸ்ஸில்
பயணிக்கும் ஹீரோயினை காதலுக்காக ஹீரோ விரட்டுவதையே சொல்லியிருந்தாலும்,
அதை எந்தவித அலுப்பும் ஏற்படாத வகையில் திரைக்கதையை ரொம்பவே கஞ்சிதாமாக
அமைத்து படத்தை ஜெட் வேகத்தில் இயக்குநர் நகர்த்தியிருக்கிறார்.
முதல் பாதியை காமெடியின் மூலம் நகர்த்திய
இயக்குநர் இரண்டாம் பாதியில் சில எதிர்ப்பாராத திருப்பங்களுடன் நகர்த்தி
இறுதியில் படத்தை ரசிக்கும்படி முடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்று
விடுகிறார்.
சசிகுமார், இந்த படத்திலும் தன்னை நல்ல
நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். அழுக்குச் சட்டை ஹீரோவாக வலம் வந்த
சசிகுமாருக்கு இந்த படத்தில் பலவிதமான காஷ்ட்யூம்களை இயக்குநர்
கொடுத்திருக்கிறார். முறைப் பெண்களை கேலி செய்வது, வயதானாவர்களுடன்
விளையாடுவது. ஹீரோயினை காதலிப்பது என அனைத்து இடங்களிலும் சகஜமானக நடிப்பை
சசிகுமார் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினி ரசிகராக இந்த படத்தில்
நடித்திருக்கும் சசிகுமார், டி.ராஜேந்தர் ரசிகரைப் போல தாடியுடன் ஏன் வலம்
வருகிறார் என்பது தான் புரியவில்லை!
மலையாளப் புது வரவு லஷ்மி மேனனுக்கு நல்ல
ஹோம்லியான முகம். அந்த முகத்திற்கு ஏற்றவாறு பலவிதாமன எக்ஸ்பிரன்ஸ்களை
கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார். மாடர்ன் டிரஸ்,
கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தால் வேலைக்காக மாட்டார். இப்படியே
ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே காலத்தை ஓட்டுங்க அம்மணி.
படத்தில் நடித்த விஜய் சேதுபதி,
அப்புக்குட்டி, நரேன், தென்னவன், செளந்தர ராஜா என அத்தனை பேரும் தங்கள்
கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில்
கதாபாத்திரங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அத்தனை பேருடைய நடிப்பும்
ரசிகர்கள் மனதில் பதியும் விதத்தில் இருக்கிறது.
அதிலும் அப்புக்குட்டி இந்த படத்தில் ஒரு புது பரிணாமத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய அளவான நடிப்பும் அமர்க்களப்படுகிறது.
சூரி, இந்த படத்திலும் பரோட்டாவை
விடவில்லை என்றாலும், படத்தின் முதல் பாதியை தனது டைமிங் காமெடி மூலம்
ரொம்ப ஜாலியாக நகர்த்தி சென்றிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு
சூரிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் காதலைப் பற்றி
சொல்லும் மான்டேஜ் பாடலான “காதல் வந்து பொய்யாக…” பாடல் திரும்ப திரும்ப
கேட்க வைக்கிறது. மற்றப் பாடல்களும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
ச.பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் அழகான தேனி
இன்னும் கூடுதலான அழகோடு ஜொலிக்கிறது. தேர்வு செய்திருக்கும்
லொக்கேஷன்களும், அதை படம்பிடித்திருக்கும் விதமும் அருமை.
சசிகுமாரின் உதவியாளரான எஸ்.ஆர்.பிரபாகரன்
இயக்கியிருக்கும் முதல் படம் இது. முதல் படத்திலேயே ரசிகர்களின் பல்சை
நன்றாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஒரே சூழலில் நகரும் திரைக்கதையாக
இருந்தாலும், அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசிக்கும்படி காட்சிகளை
அமைத்திருக்கிறார்.
திரைக்கதையை கூர்மையாக அமைத்திருக்கும்
இயக்குநர் பிரபாகர், வசனத்தையும் கூர்மையாக எழுதியிருக்கிறார். “எதிரியை
ஜெயிக்க நினைக்கனும் அழிக்க நினைக்க கூடாது”, “குத்தினவன் நண்பனாக
இருந்தால் அதை கடைசி வரை யாரிடமும் சொல்ல கூடாது.” போன்ற வசனங்கள் கைதட்டல்
வாங்கும் வசனங்கள்.
நட்பு, காதல் என்பது தமிழ் சினிமாவின்
பழைய ரசம் என்றாலும், அதை கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் சுவை கூடும்
என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இயக்குநர் ‘சுந்தர பாண்டியன்’
படத்தை மக்களுக்கு பிடிக்கும் சூப்பர் பாண்டியனாக்கியிருக்கிறார்.