Tuesday, October 30, 2012

மட்டமான படங்கள் சகிக்காமல் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநரானேன்!’- மணிரத்னத்தின் ஊமைக் குசும்பு



Conversations With Maniratnam Irks Film Makers

எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:
‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.
பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.
எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.
அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?
'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!
நியாயம்தானே!