Thursday, November 1, 2012

பீட்சா :விமர்சனம்


 கதையின் கரு: பீட்சா கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த திகிலான அனுபவங்கள்.


நரேன் நடத்தும் ‘பீட்சா’ கடையில், ‘டெலிவரி பாய்’ ஆக வேலை செய்கிறார், விஜய் சேதுபதி. இவருடைய காதல் மனைவி, ரம்யா நம்பீசன். இவருக்கு ஆவி, பேய் கதைகளில் ஈடுபாடு அதிகம். விஜய் சேதுபதி அதைக் கேட்டாலே நடுங்குகிறார்.ஒருநாள் இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு தனிமை பங்களாவுக்கு, ‘பீட்சா’ டெலிவரி செய்ய போகிறார், விஜய் சேதுபதி. அழைப்பு மணியை அழுத்தியதும், ஒரு பெண் கதவை திறக்கிறாள். சில்லறை எடுத்து வருவதாக கூறிவிட்டு, மாடிக்கு போனவள் திரும்பி வராததால், விஜய் சேதுபதி மாடிக்கு போகிறார்.



அங்கே அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சற்று நேரத்தில் அவளுடைய உடல் மாயமாக மறைந்து விடுகிறது. அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டிக்கொள்கிறது.அந்த வீட்டுக்குள் விஜய் சேதுபதிக்கு நடக்கும் திகிலான அனுபவங்களும், அதன்பிறகு நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும்தான் கதை.


விஜய் சேதுபதி, கடை முதலாளி நரேன் வீட்டுக்கு போவதில் இருந்து திகில் ஆரம்பம். பேய் பிடித்த நரேனின் மகள் விஜய் சேதுபதியை உக்கிரமாக பார்க்கும் பார்வை, குலை நடுங்க வைக்கிறது.பீட்சா பெட்டியுடன் விஜய் சேதுபதி அந்த பேய் பங்களாவுக்குள் போனதும், கதவு உள்புறமாக பூட்டிக்கொள்வது, சில்லறை எடுத்து வரப்போன பெண் திரும்பி வராதது, அவரைத்தேடி நரேன் மாடி ஏறுவது என காட்சிக்கு காட்சி இதய துடிப்பு எகிறுகிறது.


கடைசியில், ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, அட, இதற்கு போய் இவ்வளவு பயப்பட்டு இருக்கிறோமே என்று சிரிப்பு வருகிறது.


பீட்சா டெலிவரி செய்யும் இளைஞராக விஜய் சேதுபதி, முக்கால்வாசி படம் வரை அனுதாபம் சம்பாதிக்கிறார். அவருடைய காதல் மனைவியாக ரம்யா நம்பீசன். இருவரின் நெருக்கம், கதகதப்பான கிளுகிளுப்பு.‘ஆடுகளம்’ நரேன், ஓவியர் வீரசந்தானம் போன்ற பழகிய முகங்களுடன் சில புதுமுகங்களும் இருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் மிரட்டலான அம்சங்கள்.ஒரு இளம் காதல் தம்பதிகளின் இயல்பான ஊடல்–கூடலுடன் ஆரம்பிக்கும் படம், மெதுவாக திகில் பாதையில் பயணித்து, ஒரு கட்டத்தில் தியேட்டரை அமைதியில் உறைய வைக்கிறது.
கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் காணாமல் போனதை பீட்சா கடை அதிபர் நரேன் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்வது, காதுகளில் முழம் கணக்கில் பூ சுற்றுகிற சீன். ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, எல்லாமே காசுக்காகவா? என நம்ப முடியவில்லை.


கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல், பீதியூட்டியவன் அந்த பீதிக்குள் சிக்குகிற முடிவு, சூப்பர்.