சமீப நாட்களாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் துப்பாக்கி படத்தின் வசூல் கணக்குதான் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரமாகவோ, செய்தியாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இது உண்மைதானா?
கோடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்!) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
துப்பாக்கி படம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.
சென்னை நகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு சென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்!
"ஏற்கெனவே நண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி படத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்," என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'!
'தமிழ் சினிமாக்காரர்கள் வசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும் கிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன் உன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு காட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல,துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.
எதுக்கும் இந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ விளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு வசதியாக இருக்குமே!