Thursday, November 29, 2012

நூறு கோடியைத் தாண்டியதா துப்பாக்கி? கோடம்பாக்க ஜோசியர்களின் தப்புக் கணக்கு!!



சமீப நாட்களாக எந்த இணையதளம் அல்லது செய்தித் தாளைத் திறந்தாலும் துப்பாக்கி படத்தின் வசூல் கணக்குதான் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரமாகவோ, செய்தியாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
thuppakki box office collection some facts and figures
இது உண்மைதானா?
கோடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்!) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
துப்பாக்கி படம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.
சென்னை நகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு சென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்!
"ஏற்கெனவே நண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில தினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி படத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்," என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'!
'தமிழ் சினிமாக்காரர்கள் வசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும் கிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன் உன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு காட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல,துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.
எதுக்கும் இந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ விளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு வசதியாக இருக்குமே!

Wednesday, November 28, 2012

அம்மாவின் கைப்பேசி... ஒலகத் தரம்னா... அது இதாங்க!



முதல் படமான அழகியிலிருந்தே அடிக்கடி தங்கர் பச்சான் அரற்றுவது 'ஒலக சினிமா'. வெறும் சினிமாக்காரராக இல்லாமல், கொஞ்சம் எழுதவும், ஏகத்துக்கும் பேசவும் தெரிந்தவர் என்பதால் இந்த அரற்றல் சமயத்தில் ஒப்பாரி ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ammavin kaipesi review

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் போறாத காலம், அந்த ஒலக சினிமா அம்மாவின் கைப்பேசியாக வந்து தொலைத்துவிட்டது.

இனி தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சினிமா எடுக்க மாட்டேன் என பாஞ்சாலி சபதம் ரேஞ்சுக்கு சபதமெடுத்திருக்கும் பச்சான் வெளியிட்டுள்ள கடைசி தமிழ்ப் படம் என்ற சின்ன ஆறுதலோடு, படத்தின் விமர்சனத்தைப் படியுங்கள்.
பொறுப்பில்லாமல், வெட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் கடைசி மகன் சாந்தனுவை, நாலு காசு சம்பாதித்து ஊரார் மதிக்கும்படி வரவேண்டும் என்று ஒரு நாள் வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவரது அம்மா. அம்மாவின் ஆசையை சாந்தனு நிறைவேற்றினாரா? என்பது வழக்கம் போல க்ளைமாக்ஸ்.
இடையில் பிரசாத் என்ற பாத்திரத்தில், மீனாளை இறுக்கியணைச்சு உம்மா கொடுத்து பிழிந்தெடுக்கும் தங்கர் பச்சான் லூட்டிகளுக்கு தனி கட்டுரை தயார் பண்ண வேண்டும்.

படத்தின் ப்ளஸ் என்று எதையாவது சொல்ல ஆசைதான். ஆனால் தங்கரின் இந்த உலக கைப்பேசியில், அப்படி உருப்படியாக ஒரு காட்சியும் இல்லை. எதற்கெடுத்தாலும் கிராமத்தைக் காட்டுவதாகக் கூறி ஆடு, கோழி, கீரிப்பிள்ளை என கேமிராவில் சிக்கியதையெல்லாம் காட்சியாகத் திணித்து கடுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.

இங்கிருப்பவர்களுக்கு இசையே தெரியவில்லை என்று கூறி மும்பையிலிருந்து தங்கர் பிடித்து வந்திருக்கும் குல்கர்னியின் பாடல்களைக் கேட்டு, வயிறு அப்செட்டாகி பின் வாசல் வழியாக ஓடுகிறார்கள், படத்துக்கு வரும் பத்துப் பதினைந்து பேரும்!

என்னது... சாந்தனு நடிப்பு பத்தி கேக்கறீங்களா...? பாவம்... அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றார்...!!

நல்லா நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு இந்த இனியா... அவரையும் லிப் டு லிப்புக்கு மட்டும் ஊறுகாயா உபயோகப்படுத்தி ஓரமா உட்கார வச்சிடறார் தங்கர்.
தங்கர் பச்சானின் தகர டப்பா பாத்திரம் மட்டும் இல்லாமலிருந்தால் கூட இந்தப் படத்தை கொஞ்சம் சகித்திருக்கலாமோ என்னமோ...

அம்மாவின் கைப்பேசிகள்தான் துப்பாக்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.. நியாயமாக விஜய், முருகதாஸ்கள் தங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.


Naduvula Konjam Pakkathai Kanom From Nov 30
கடந்த மாதமே வெளியாகவிருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.
காரணம்... படத்துக்குக் கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்கள்.
அன்றைக்கு இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட்டால் போதும் என்ற மனநிலையில், கிடைத்த 35 அரங்குகளில் வெளியிடத் தயாராக இருந்தனர்.
ஆனால் படத்தைப் பார்த்த திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், 'நல்ல படத்தை ஏன் கொல்கிறீர்கள்... கொஞ்சம் தள்ளிப் போட்டு பெரிசாக வெளியிடுங்கள்,' என்று அறிவுறுத்த, நிறுத்தி வைத்தார்கள்.
அது ரொம்ப நல்லதாகப் போயிற்று. படத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஜேஎஸ்கே பிலிம்ஸ், சதீஷ் குமார், இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார்.
நாளை மறுநாள் 155 அரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாலாதி தரணீதரன் கூறுகையில், "கடவுளுக்கும் பத்திரிகை உலகினருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். சினிமா மீது உண்மையான அக்கறையோடு, இந்தப் படத்தைப் பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள். அவர்களின் நேர்மையான விமர்சனம் இந்தப் படத்துக்கு நல்ல விலையையும், மிக அருமையான வெளியீட்டுச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நாங்கள் 35 தியேட்டர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைச்சோம். ஆனால் இன்னிக்கு பத்திரிகையாளர்கள் யோசனையால், 155 அரங்குகளில் வெளியிடும் நிலை வந்திருக்கிறது.
படத்தில் தேவையில்லாத 25 நிமிடக் காட்சிகளைக் குறைத்துவிட்டோம். இன்னும் க்றிஸ்ப்பாக வந்திருக்கிறது படம். நாளை மறுநாள் படம் வெளியாகிறது," என்றார்.
பீட்சா படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றிப்படமாக இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் அமையும் என நம்புவதாக ஹீரோ விஜய் சேதுபதி சந்தோஷமாகக் குறிப்பிட்டார்.
படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

Thursday, November 22, 2012

விஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்!- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்!


பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட் இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும் அரங்குகளில்.
தீபாவளிக்கு வந்த படங்களில் பரவாயில்லை என்ற மவுத் டாக் வந்துவிட்டது. அதை நம்பி, விஜய்யும் விடிய விடிய பார்ட்டி கொடுத்து, அந்த தெம்போடு அடுத்த துப்பாக்கிக்கு ரெடியாகிவிட்டார்.
ஆனால் துப்பாக்கி ஓடும் தியேட்டர்களில் ஜனங்களின் பல்ஸ் என்ன என்று பார்க்கப் புறப்பட்டோம்.
அடடா... அவங்கதாங்க நிஜமான விமர்சகர்கள். எந்த முன் தயாரிப்புமின்றி, படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் அடிக்கிற கமெண்டைக் கேட்டால், ஏன்டா இப்படி ஒரு படத்தில் நடித்தோம் என விஜய்யும் (அவருக்கு அப்படியெல்லாம் தோணுமாங்கிறது சந்தேகம்தான்...), இவரோடு ஏன் சேர்ந்தோம் என இயக்குநர் முருகதாஸும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலாவது நம்பகத்தன்மை அல்லது உண்மை இருக்கிறதா என்பது முதல் கேள்வி.
படம் முழுக்க மிலிட்டரி ஆபீ.. ஸர் விஜய், ஏதோ செட் தோசை சுடுவது போல எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எழவு... அதைக் கேட்க ஒரு போலீஸ் கூட குறுக்கே வரவே மாட்டேங்குது. மும்பையில் போலீஸ்காரங்க அவ்வளவு டம்மி பீஸுங்களா...?
அட ஒரு கப்பலுக்கு வெடி வைக்கிறாய்ங்கய்யா... அந்தக் காட்சியை 50 ரூபாய்க்கு இங்கிலீஷ் பட சிடி வாங்கிப் பாத்து அப்படியே சுட்டு எடுத்திருந்தா கூட நல்லா வந்திருக்கும். கெரகம்... இவர்களது லோ குவாலிட்டி கிராபிக்ஸை பாருங்கள்... கப்பல் வெடிச்சதும் ஏதோ சாம்பிராணி போட்ட மாதிரி சவசவன்னு கிளம்புது புகை!
ஆமா... இந்த சத்யனையெல்லாம் யாரும் கேப்பாரே இல்லையா... காமெடி என்ற பெயரில் அவர் போடற சத்தம் கர்ண கொடூரம்டா சாமி.. பேசாம அவரை ஊமையாவே நடிக்க வச்சிருக்கலாம்..!
அவருக்கு கொஞ்சமும் சளைக்காத சொதப்பல் காமெடி பீஸ் ஜெயராம்.
மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனா ஹீரோ நம்ம இளைய தளபதியாச்சே... மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தானே சேரணும்... சும்மா... இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்துக் கட்டுகிறார் பாருங்க... 2008 மும்பை குண்டு வெடிப்பப்போ இந்தாளு எங்கேய்யா போயிருந்தார்னு தியேட்டர்ல கமெண்ட் அனல் பறக்குது!
அப்புறம் இந்த ஹீரோயின்...
குணா படத்துல கமல் சொல்வாரே.. நடு நடுவே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கன்னு... அப்படித்தான்... துப்பாக்கி சத்தம் கொஞ்சம் காதைக் கிழிக்கும்போது, இந்தப் பொண்ணை லம்பாடி டிரஸ்ல ஆடவிட்டு, டமார்னு மறைச்சு வெச்சுக்கிறார் டைரக்டர். அப்புறம் ஒரு மூணு ரீல் கழிச்சு திரும்ப கண்ல காட்டறார். இப்படியே காட்டி காட்டி... க்ளைமாக்ஸ்ல கரெக்டா ஹீரோவோட டூயட் ஆட வரவச்சுடறார்!
படத்தை பார்க்கும்போது பலர் கோபத்தில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே தூங்கிவிட்டதை பார்த்து, 'அட, இது நல்லா ஐடியாவா இருக்கே' என்று அவர்களில் பலரும் தூங்க ஆரம்பித்ததும் தான் நமது ரவுண்ட்-அப்பின் ஹைலைட்!
ரமணா மாதிரி சென்சிபிளான படம் கொடுத்த முருகதாஸ்தானா இதுன்னு ரொம்ப சந்தேகமாவும்... இவரும் விஜய் கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரேங்கிற வருத்தமும்தான், படம் முடிஞ்சதும் எனக்கு மிஞ்சிச்சு!

Tuesday, November 20, 2012

நித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து!





Singamuthu Backs Nithyananda

'நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்..'
-இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் சிங்கமுத்'தானந்தா!
ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், நீங்கதான் ஆன்மீகத்துல ஈடுபாடுள்ளவராச்சே, நித்யானந்தா செஞ்சது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு சிங்கமுத்து தந்துள்ள பதிலைப் பாருங்கள்:
''நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்.
அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி 'நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லை'னு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து,
'ரஞ்சிதா விவகாரம் உண்மையா?'னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி 'இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்'னு சொன்னார்!'

Thursday, November 15, 2012

துப்பாக்கி - விமர்சனம்




நடிப்பு: விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெய்ராம், வித்யூத் ஜம்வால்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: கலைப்புலி தாணு
எழுத்து, இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
ஆக்ஷன் படங்கள் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத விதி. துப்பாக்கியும் அதற்கு விலக்கில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பார்க்கும்படி ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா தந்திருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் வீழ்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது துப்பாக்கி.

tuppakki review
படத்தின் கதையை விலாவாரியாக சொல்வது, படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும். ஆனாலும் ஒன்லைனை மட்டும் 'சில லைன்களில்' சொல்லிவிடுகிறோம்.


மிலிட்டரியிலிருந்து 40 நாட்கள் லீவில், யூனிபார்மைக் கூட கழட்டாமலேயே வருகிறார் மும்பைத் தமிழன் விஜய். அதே யூனிபார்முடன் காஜலை பெண்பார்க்கப் போகிறார். ஒரு பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அப்போது பிக்பாக்கெட் ஒருவனைப் பிடிக்கிறார் விஜய். அந்த நேரத்தில் இன்னொருவன் சம்பந்தமே இல்லாமல் ஓட, விஜய் அவனைத் துரத்திப் பிடித்து விசாரிக்கும்போதுதான் மிகப் பெரிய தீவிரவாத நெட்வொர்க் தெரிகிறது.

தீவிரவாதிகள் 12 இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருப்பது தெரிந்த விஜய், கையில் கிடைத்த தீவிரவாதியை தப்பிக்க விட்டு, தீவிரவாதிகளின் தலைமையை அழிக்க முயல்வதும், அந்த தலைமை விஜய்யை அழிக்க முயல்வதும், இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதும்தான் கதை.
பழைய எம்ஜிஆர் பாணி கதைதான் என்றாலும் அதை முருகதாஸ் கையாண்ட விதம் ரசிகர்கள் தன்னை மறந்து பல காட்சிகளில் கைத்தட்ட வைக்கிறது.
போலீஸ் வேடமே விஜய்க்குப் பொருந்தவில்லை... இதில் மிலிட்டரி ஆபீசர் கெட்டப் எப்படியோ.. என்ற யோசனையோடு உட்கார்ந்தால்.. அட.. அசத்தலாகப் பொருந்துகிறது!

பஞ்ச் வசனங்கள் குறைத்து, லொட லொட சவால் பேச்சுக்களைத் தவிர்த்து அடக்கி வாசிக்கிறார் விஜய். பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு... துப்பாக்கி வெற்றிக்குப் பிறகும் இந்த அடக்கம் தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும்!
காஜல் அகர்வால் கண்ணுக்கு லட்சணமாக வந்து போகிறார். அவர் வேலை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும், தீவிரவாதம் போரடிக்கும் போது விஜய்யுடன் ரொமான்ஸ் பண்ணுவதும்தான். அதை பக்காவாக செய்கிறார்.

சத்யன், ஜெய்ராம் காட்சிகள் சமயத்தில் ஜோர்... கொஞ்சம் போர்!
வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை இன்னும் ஒருபடி உயர்த்திப் பிடிக்கிறது.

ஆக்ஷன் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், தீவிரவாதிகளால் விஜய் அண்ட் கோவின் தங்கைகள் கடத்தப்பட அதை விஜய் கண்டுபிடிக்கும் காட்சிகள்!

12 தீவிரவாதிகளையும் தீர்த்துக்கட்ட விஜய் போடும் பிளான்.. அக்மார்க் மாஸ்டர் ப்ளான்...
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் ஏகப்பட்டதைச் சொல்லமுடியும். ஆனால் அதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனால் எந்தப் படத்தையும் ரசிக்க முடியாதுதான். முக்கியமாக துப்பாக்கியின் வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யத்துக்காக... குறைகளை மன்னிக்கலாம்!
சந்தோஷ் சிவனுக்கு சவால்கள் ஏதுமில்லை.

கஜினியில் விஸ்வரூபமெடுத்து, ஏழாம் அறிவில் சிறுத்துப் போன முருகதாஸ்... மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த வெற்றி அவரையும் ஹீரோ விஜய்யையும் அதிகம் பேச வைக்காமல் இருக்கக் கடவது!

துப்பாக்கி.. அதிர்வெடி!

Thanks thatstamil

போடா போடி - விமர்சனம்


போடா போடி - விமர்சனம்


நடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ்
இசை: தரன் குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: விக்னேஷ் சிவன்

பெண்ணென்பவள் திருமணத்துக்குப் பின் கணவனை கவனித்துக் கொண்டு, பிள்ளை பெற்று, அதை வளர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமா... அவளுக்கென்று கேரியர் வேண்டாமா...
தன் கண் முன் மனைவி ஆண் நண்பர்களுடன் எப்படி இருந்தாலும் அதை கணவன் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

poda podi review

-இந்த ஈகோ மோதல்தான் போடா போடி படம். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.


அனிமேஷன் டிசைனர் சிம்புவும், நடனக் கலைஞர் வரு சரத்குமாரும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் பொய் இல்லாமலா... இந்தக் கதையில் பொய்யாய் அவிழ்த்துவிடுபவர் ஹீரோயின் வரலட்சுமி. ஆனால் எதற்காகவும் நடனத்தை விட்டுத் தர மறுக்கிறார். இந்தப் பொய் மற்றும் பிடிவாதத்தால் வெறுத்துப்போய் 'போடி உன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்' என்று ஓடுகிறார் சிம்பு.

ஊடல் முடிந்து மீண்டும் கூடுகிறார்கள். இந்த முறை, திருமணம் செய்து கொண்டால் வரலட்சுமியை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனை உதிக்க, சிம்பு அதை செயல்படுத்த முயல்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் நடனத்தை விடமுடியாது, தன் பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளமுடியாது என்கிறார் வரலட்சுமி. கர்ப்பமாக்கிவிட்டால் நடனமாட முடியாதே என்ற அபார யோசனையை சித்தப்பா விடிவி கணேஷ் சொல்ல, அதையும் செயல்படுத்திப் பார்க்கிறார்.

குழந்தை பிறக்கிறது. இருவரின் சண்டையில் ஒரு விபத்து நேர, அதில் குழந்தை இறக்கிறது. சிம்புவும் வரலட்சுமியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை ஒடிப்போய் மல்லுக்கட்டி மீண்டும் குடித்தனம் நடத்த கூட்டி வருகிறார் சிம்பு, நடனமாடியே தீருவேன் என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்டு.
ஆனால், மீண்டும் ஈகோ மோதல் வெடிக்கிறது. நடனமாடும்போது அடுத்தவன் உன்னைத் தொடுவதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சிம்புவின் ஆதங்கத்தின் மூலம்...

கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள். கண்டவனுடன் ஆடுவதைவிட, கணவனுடனே ஆடித் தொலைக்கிறேன் என வரலட்சுமி முடிவு செய்ய, சிம்பு டான்ஸ் பார்ட்னராகிறார்.

ஆனால் டான்ஸ் காம்பெடிஷனில் அவர் சொதப்புகிறார். 'சரி, எனக்குதான் சல்சா டான்ஸ் வரவில்லை.. அதனால் எனக்கு நன்றாக ஆட வரும் குத்து டான்ஸுக்கு நீ மாறிக் கொள்' என சிம்பு அட்வைஸ் பண்ண, சல்சா குத்துக்கு மாறுகிறது. சக்ஸஸ் ஆகிறது.

ஆனால்... அடுத்து டான்ஸ் காம்பெட்டிஷனில் இன்னும் 14 ரவுண்டுகள் இருக்கின்றன. அதில் எப்படி ஜெயிப்பது என்று வரலட்சுமி கேட்க, அதற்கு சிம்பு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அது மீண்டும் வரலட்சுமியை கர்ப்பமாக்குவது.. அப்புறம்....சுபம்!

ஸ்ஸப்பா... ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன். கதையை எழுதும் போதுதான் இத்தனை இம்சையாக இருக்கிறதே தவிர... அதை புது இயக்குநர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதம், கொஞ்சம் புதுசாகவும் சுவாரஸ்யமாகவும்தான் இருக்கிறது.

நெத்தியடியாக ஒரு தோல்வி கிடைத்தால்தான் சிம்பு மாதிரி ஹீரோக்கள் வாயையும் கையையும் அடக்கிக் கொண்டு நடிப்பார்கள் போலிருக்கிறது. ஒஸ்தியில் பட்ட அடி, இந்தப் படத்தில் அவரை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது (அட்லீஸ்ட் அப்படி நடிக்கவாவது செய்ய வைத்திருக்கிறது).
அவரை விட வெயிட்டான ரோல் வரலட்சுமிக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். குரலும் தோற்றமும் சற்று கடூரம்தான் என்றாலும், அவரது ஈடுபாடும், டான்ஸும் அவற்றை மறக்கடிக்க வைக்கிறது. அவரை ஏன் இந்தப் படத்துக்கு ஹீரோயினாக்கினார்கள் என்பதை சரியாக நியாயப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது. ஆனால் இன்னும் எத்தனைப் படத்துக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

ஷோபனாவுக்கு ஒரு ரெண்டுங்கெட்டான் கேரக்டர்.
ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக பிரிந்த மனைவியை கூட்டிப் போக வரும் சிம்பு, ஷோபனாவிடம் வாதிடுவது. குழந்தைக்காக அவர் பாடும் ங்கொப்பன் மவனேயை ரசிக்க முடியவில்லை என்றாலும், அதை எடுத்திருக்கும் இடம், விதம் அழகு. முழு கிரெடிட்டும் ஒளிப்பதிவாளருக்குதான்!

டாய்லெட்டுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்த திருமண மோதிரத்தை வரலட்சுமி மீண்டும் எடுப்பது, படத்தில் சபாஷ் பெறும் இன்னொரு காட்சி!
காதல், ஊடல், சண்டை, பிரிவு, மீண்டும் கூடல், ஊடல், சண்டை என ரோலர் கோஸ்டர் மாதிரி காட்சிகள் நகர்வதில் ஒரு கட்டத்தில் களைப்புத் தட்டுவதும் உண்மைதான். ஆனால் அந்த டான்ஸ் காம்பெடிஷன் நெருங்க நெருங்க, நாமும் அதில் ஐக்கியமாவதை உணர்கிறோம்...

தரணின் இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தன் பழைய பாடல்களையே புதுப் பாட்டாக கோர்ப்பதை சிம்பு எப்போது விடப் போகிறாரோ!
புது இயக்குநர் விக்னேஷ் சிவன், எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான கதையை வித்தியாசமான அணுகுமுறையோடு ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது!


எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ரசிக்கலாம்!

Thanks Thatstamil.com

Monday, November 5, 2012

மாமல்லபுரம் கடலில்... சோனாவும் பிரேம்ஜியும் குளித்தபோது...!



Sona Drown Mamallapuram Sea

நடிகை சோனா மகாபலிபுரம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட, கூடவே குளித்த பிரேம்ஜியும் குழுவினரும் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.
ஒன்பதுல குரு என்ற படத்துக்காகத்தான் இப்படி இருவரும் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்களாம், இயக்குநர் பிடி செல்வகுமார் மேற்பார்வையில்.
அப்போது இருவரும் அலையில் சிக்கினார்களாம். சோனாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடி அலற, படக்குழுவும் பிரேம்ஜியும் கடலுக்குள் பாய்ந்து சோனா தலைமுடியை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தார்களாம்.
உயிர் பிழைத்தது குறித்து சோனா கூறுகையில் (சத்தியமா இது பப்ளிசிட்டி இல்லையாங்க!!)," ஒன்பதுல குரு படத்தில் நான் குளிப்பது போன்றும், என்னோடு நடிப்பவர்கள் கடலில் விழுந்து விடுவது போன்றும் காட்சிகளை எடுத்தனர். இயக்குனரிடம் என்னை இன்சூரன்ஸ் செய்து உள்ளீர்களா என்று அப்போது வேடிக்கையாக கேட்டபடி நடித்துக் கொண்டு இருந்தேன்.
திடீரென என்னுடன் நடித்தவர்கள் கடலில் விழுவதற்கு பதிலாக தவறிப் போய் நான் விழுந்துவிட்டேன். பயந்துபோய் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடினேன்.
படப்பிடிப்பு குழுவினர் வந்து மீட்டனர். இது எனக்கு பயங்கரமான அனுபவமாக இருந்தது," என்றார்.

Top 10 Tamil actors salary list

டாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

ஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பலருக்கு ஆர்வம அதிகம்.

அதிலும் தமிழ் நடிகர்களின் சம்பளத்தை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம உண்டு. ஏனென்றால் அதன் மூலம் மட்டுமே நாம் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.

தமி

ழ் சினிமாவின் பட்ஜெட் இன்று எங்கேயோ போய்விட்டது. அதிலும் தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் கற்பனைக்கும் எட்டாத அளவில் உள்ளது. படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை கூட்டும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. தமிழ் நடிகர்களின் சம்பளம் ரகசியமாக இருந்தாலும் தோராயமாக நாம் அவற்றை கணக்கிட முடியும்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். அதுமட்டுமல்ல ஆசியாவிலேயே இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உள்ளார். எனவே முதலாம் இடத்திற்கு இங்கு போட்டி இல்லை. ஆனால் அடுத்த ஒன்பது இடங்களுக்கு மிகுந்த போட்டி உள்ளது. எனவே இந்த ஒன்பது இடங்கள் அடிக்கடி மாறக்கூடியது. ஒரு நடிகரின் ஒரு படம் வெற்றி அடைந்தால் சம்பளம் கூடுவதும், தோல்வி அடைந்தால் சம்பளம் குறைவதும் ரேங்க் பட்டியலை மாற்றிவிடக்கூடும். இது இப்போதைய நிலவரம்தான். அடுத்து வெளிவரக்கூடிய படங்களின் வெற்றி தோல்விகள் இந்த தரப்பட்டியலை மாற்றலாம்.

இடம்
நடிகர்
புகைப்படம்
சம்பளம் (கோடியில்)
குறிப்பு
1
ரஜினிகாந்த்
35 – 40
எந்திரன் படத்திற்கு
சம்பளம் உட்பட
லாபத்தில் பங்கு
என ரஜினி பெற்றது
ரூ. 54 கோடி
என்கிறது சினிமா
வட்டாரம்.

2
சூர்யா
24
மாற்றான் படத்திற்கு
சூர்யா பெற்ற
சம்பளம்
24 கோடியாம்.

3
விஜய்
20
யோகன் படத்திற்கு விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் 20 கோடி.

4
கமல்ஹாசன்
19.5
கமல்ஹாசன் சம்பள
விவரம் தெளிவாக
தெரியவில்லை. விஸ்வரூபம்
படத்திற்கு
கமலின் சம்பளம்
19.5 கோடி என்கிறது
சினிமா வட்டாரம்.

ஆனாலும் மற்றொரு
தரப்போ ரூ. 45 கோடி
என்கிறது.

5
அஜித்
14 – 16
பில்லா 2 படத்திற்கு
அஜித் பெற்ற சம்பளம்
14 முதல் 16 கோடி
வரை இருக்கலாம்
என்கிறது சினிமா
வட்டாரம்.

6
விக்ரம்
10
சமீபத்திய சில
படங்கள் தோல்வி
அடைந்ததால்
விக்ரமின் சம்பளம்
ரூ. 10 கோடிதான்.

7
கார்த்தி
6 – 8
கார்த்தி நடிக்கும்
புது படத்திற்கு 6
முதல் 8 கோடி
வரை சம்பளம்
பேசப்பட்டுள்ளதாக தகவல்.

8
தனுஷ்
5
தனுஷின் “ 3 ” எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால் அவருடைய சம்பளம் 4.5 முதல் 5 கோடி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9
சிம்பு
4
சிம்புவின் சமீபத்திய படங்கள் வெற்றியடையாவிட்டாலும் அவரின் சம்பளம் 3 முதல் 4 கோடியாக உள்ளது.

10
விஷால்
2
விஷாலின் சம்பளம் இரண்டு கோடியாக உள்ளது

Friday, November 2, 2012

ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?



Maatraan Spl Prg Sun Tv

தலைப்பை பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.
பக்கம் பக்கமா பலே பேச்சு
அது போகட்டும் காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க என்று விட்டுவிடலாம். ஆனால் சேனல்களில் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசும்போதுதான் சிரிப்பு வருகிறது.
சீன் பை சீன் விளக்கம்
ஞாயிறு காலை 9.30 மணிக்கு சன் டிவியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மாற்றான் இயக்குநர் கே.வி. ஆனந்த் தொடங்கி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சீன் பை சீன் படத்தை பற்றி விளக்கினார்கள்.
லிங்குசாமியின் காமெடி
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் பேசினார் இயக்குநர் லிங்குசாமி. ஏதாவது ஒரு படத்தைப் பற்றி பேசினாலே முதல்நாள் முதல்ஷோ பார்க்கவேண்டும் என்று நினைப்போம். அதே மாதிரிதான் மாற்றான் படமும் என்று போட்டாரே ஒரு போடு. மிகப்பெரிய காமெடி கேட்டதுபோல சிரிக்கத்தான் முடிந்தது.
மாற்றான் பார்ட் 2!
இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், மாற்றான் புரமோஷனுக்கு சன் டிவிக்கு போயிருந்தவரிடம், 'இப்படத்தின் செகன்ட் பார்ட் வருமா?' என்று கேட்டதுதான் தாமதம் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்ட் பார்ட்டாக சிரித்து சமாளித்திருக்கிறார் சூர்யா.

சசிகுமாருடன் கைகோர்க்கிறார் சூர்யா?



Surya Join Hands With Sasikumar

அடுத்து சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதற்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகுமார்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரண்டி நடிகர் கம் இயக்குநராக உள்ளார்.
ஹீரோ என்று பார்த்தாலும், முன்னணி நாயகர்களுக்கு இணையாக வந்துவிட்டார். சுந்தரபாண்டியன் அவரை ஒரு படி மேலே உயர்த்திவிட்டது.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சூர்யாவுக்காக சசிகுமார் கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யா கூறுகையில், "சசிகுமாரும், நானும் சந்தித்துப் பேசியது உண்மைதான்.
கதை பற்றியும் விவாதித்துள்ளோம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பார்க்கலாம்," என்றார்.
அப்படி முடிவானால், சிங்கம் 2 முடிந்தபிறகு இந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்!

Thursday, November 1, 2012

பீட்சா :விமர்சனம்


 கதையின் கரு: பீட்சா கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த திகிலான அனுபவங்கள்.


நரேன் நடத்தும் ‘பீட்சா’ கடையில், ‘டெலிவரி பாய்’ ஆக வேலை செய்கிறார், விஜய் சேதுபதி. இவருடைய காதல் மனைவி, ரம்யா நம்பீசன். இவருக்கு ஆவி, பேய் கதைகளில் ஈடுபாடு அதிகம். விஜய் சேதுபதி அதைக் கேட்டாலே நடுங்குகிறார்.ஒருநாள் இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு தனிமை பங்களாவுக்கு, ‘பீட்சா’ டெலிவரி செய்ய போகிறார், விஜய் சேதுபதி. அழைப்பு மணியை அழுத்தியதும், ஒரு பெண் கதவை திறக்கிறாள். சில்லறை எடுத்து வருவதாக கூறிவிட்டு, மாடிக்கு போனவள் திரும்பி வராததால், விஜய் சேதுபதி மாடிக்கு போகிறார்.



அங்கே அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சற்று நேரத்தில் அவளுடைய உடல் மாயமாக மறைந்து விடுகிறது. அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டிக்கொள்கிறது.அந்த வீட்டுக்குள் விஜய் சேதுபதிக்கு நடக்கும் திகிலான அனுபவங்களும், அதன்பிறகு நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும்தான் கதை.


விஜய் சேதுபதி, கடை முதலாளி நரேன் வீட்டுக்கு போவதில் இருந்து திகில் ஆரம்பம். பேய் பிடித்த நரேனின் மகள் விஜய் சேதுபதியை உக்கிரமாக பார்க்கும் பார்வை, குலை நடுங்க வைக்கிறது.பீட்சா பெட்டியுடன் விஜய் சேதுபதி அந்த பேய் பங்களாவுக்குள் போனதும், கதவு உள்புறமாக பூட்டிக்கொள்வது, சில்லறை எடுத்து வரப்போன பெண் திரும்பி வராதது, அவரைத்தேடி நரேன் மாடி ஏறுவது என காட்சிக்கு காட்சி இதய துடிப்பு எகிறுகிறது.


கடைசியில், ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, அட, இதற்கு போய் இவ்வளவு பயப்பட்டு இருக்கிறோமே என்று சிரிப்பு வருகிறது.


பீட்சா டெலிவரி செய்யும் இளைஞராக விஜய் சேதுபதி, முக்கால்வாசி படம் வரை அனுதாபம் சம்பாதிக்கிறார். அவருடைய காதல் மனைவியாக ரம்யா நம்பீசன். இருவரின் நெருக்கம், கதகதப்பான கிளுகிளுப்பு.‘ஆடுகளம்’ நரேன், ஓவியர் வீரசந்தானம் போன்ற பழகிய முகங்களுடன் சில புதுமுகங்களும் இருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் மிரட்டலான அம்சங்கள்.ஒரு இளம் காதல் தம்பதிகளின் இயல்பான ஊடல்–கூடலுடன் ஆரம்பிக்கும் படம், மெதுவாக திகில் பாதையில் பயணித்து, ஒரு கட்டத்தில் தியேட்டரை அமைதியில் உறைய வைக்கிறது.
கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் காணாமல் போனதை பீட்சா கடை அதிபர் நரேன் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்வது, காதுகளில் முழம் கணக்கில் பூ சுற்றுகிற சீன். ‘சஸ்பென்ஸ்’ உடையும்போது, எல்லாமே காசுக்காகவா? என நம்ப முடியவில்லை.


கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல், பீதியூட்டியவன் அந்த பீதிக்குள் சிக்குகிற முடிவு, சூப்பர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம்... புல்லரிக்கும் தீபிகா படுகோன்



Deepika Padukone Admires Rajinikanth

ரஜினியுடன் நடித்த அனுபவத்தை புல்லரித்து சொல்லிக் கொண்டிருக்கிறார் கோச்சடையான் நாயகி அனுஷ்கா.
மேலும் இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப்படம் என்ற பெருமை ரஜினியின் கோச்சடையானுக்கு கிடைக்கும் என்கிறார் அம்மணி.
ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
படத்தின் நாயகி தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் நடித்தது குறித்து குறிப்பிட்டிருந்தார். 'ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம்' என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "ரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும். உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை," என்றார்.

இந்தியாவின் அழகி நமீதா - ஜப்பான் டிவி சேனல் அறிவிப்பு



டோக்கியோ: இந்தியாவின் அழகி நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி.
namitha is indian beauty says japanese tv channel
இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி.
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்:
'யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends
Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளோம்.
Namitha
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி!



 Sonia Gandhi S 28th Death Anniversary

சென்னை: தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!
அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.
"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!
அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!