Monday, June 1, 2015

பறவைமுனியம்மாவின் சோகம் ..

பறவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அவரது பாடல்கள் ஒளிபரப்பாகி நல்ல நிலையில் இருந்தார்.
75 படங்களில் நடித்தும் இருக்கிறார்.பல மேடைக் கச்சேரிகளில் இவரது பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என சொல்லலாம்.வெளிநாடுகளுக்குச் சென்று கூட பாடியிருக்கிறார்.கடைசியாக மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கூட ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.அதன்பிறகு காணாமல் போன பறவை முனியம்மா என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வார இதழில் அவரின் தற்போதைய நிலமையைக் கண்டு மிக வருத்தமாக இருந்தது....
பறவை முனியம்மா தற்போது குரல் உடைந்துபோய் பாட முடியாமல்,தைராய்டு மூட்டுவலி,என பல உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் கச்சேரி,பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் சில குழந்தைகள் பெற்றாலும்,ஒரே ஒரு மகளின் வீட்டில் மருமகனின் கரிசனத்தோடு மருத்துவச் செலவிற்கே பணம் செலவளிக்க வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது தான் மிகவும் கொடுமை.
அவரது கணவர் இறந்த சோகம் ஒருபுறமும், நடிப்பையும், பாட்டையும் நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த இவருக்கு, இப்போது நடிக்க முடியாமல் தன் குரலும் உடைந்துபோய்விட்டதால்,தன்னால் பேசக்கூட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்றக் கவலை பறவை முனியம்மாவிற்கு பெருத்த சோகமாக குடிகொண்டு இருக்கிறது.பலருடன் நடித்த பறவை முனியம்மாவிற்கு விவேக், சந்தானம் உள்ளிட்டவர்கள் கூட உதவி செய்ய முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, தன்னை சந்திக்கக்கூட செல்லவில்லை என்பது தான் சினிமாத்துறை ஒருபுறம் நல்லநிலையிலும், ஒருபுறம் மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதை காட்டுகிறது.
விதவை பென்சனாவது தனக்குக் கிடைத்தால் மருத்துவ உதவிக்கு வசதியாக இருக்கும் ஆனால் அதுகூட தனக்கு கிடைக்கவில்லை என்கிறார். நடிக சங்கங்கள் இவரைப் போன்றோருக்கு உதவி செய்ய வேண்டும், துணை, இணையாக நடிக்கும், நடிகர், நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்காவிட்டாலும், நடிப்பவர்களுக்கு தகுந்த அளவில் சம்பளப்பணத்தை அதிகரிக்கச் செய்யலாம். இல்லை வாழ்நாள் முழுதும் கஷ்டப்படாமல் இருக்க நடிக சங்ககளில் இருந்து பென்ஷன் போன்ற ஏதாவது திட்டங்கள் கொண்டுவரலாம்..
பறவை முனியம்மாவைப் போல் எத்தனை பேர் நடிப்பை நம்பி, சம்பளம் குறைவாகப்பெற்று, நடிக்க வாய்ப்பில்லாதபோது, தங்கள் கடைசி காலங்களில் சாப்பிடக்கூட வசதியில்லாமல், கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டுருக்கிறார்கள் என்பதற்கு பறவைமுனியம்மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
- Prathiba Prathi