Thursday, December 20, 2012

நீதானே என் பொன்வசந்தம்...

நீதானே என் பொன்வசந்தம்... இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். இளையராஜாவின் இனிய இசை வேறு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால்...? ஜீவாவும் சமந்தாவும் குட்டியூண்டு இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது நட்பும் சண்டையும். அந்த நட்பை 10ம் வகுப்பு படிக்கும்போது மீண்டும் புதுப்பிக்கிறார்கள். ப்ளஸ் டூவில் மீண்டும் பிரிகிறார்கள்.
 
 காரணம் பொஸஸிவ்னஸ்.. ஈகோ. ஒரு இடைவெளிக்குப் பிறகு கல்லூரி கலை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காதலுடன் கூடவே வருகிறது இருவரின் ஈகோவும். ஒரு கட்டத்தில் இனி பிரிவே நிரந்தரம் என்று தனித்தனி திசையில் போகிறார்கள். ஜீவாவுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து, தாலிகட்டுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள்... இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். neethane en ponvasantham review மேலும் படங்கள் நிறைய காட்சிகளை ஏற்கெனவே இதே கவுதம் மேனன் படத்தில் பார்த்த நினைவு படம் முழுக்க வந்துபோகிறது, க்ளைமாக்ஸ் தவிர. 
 
போதாக்குறைக்கு விண்ணைத்தாண்டி வருவாயாவை காமெடிக்காக உல்டா பண்ணியிருக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ இசைஞானி இளையராஜாதான். படம் முழுக்க அவரது பாடல்களும் இசையும் நம்முடன் பயணிப்பதால், கவுதம் மேனன் ஜவ்வாய் இழுத்திருக்கும் காட்சிகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது. சற்று முன்பு பார்த்த மேகம்... பாடலும் இசையும் அந்த சூழலும் நம்மை எங்கோ அழைத்துப் போகின்றன. இந்த இசையை, பாடல்களையும்கூட சிலர் விமர்சிக்கும்போது.. மணிவண்ணன் அடிக்கடி சொல்வது போல, 'என்னடா டேஸ்டு உங்க டேஸ்டு' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! சமந்தா... சமீப ஆண்டுகளில் ஒரு நடிகைக்காக படம் பார்க்கலாம் என்று தோன்றியது அநேகமாக இவருக்காகத்தான் இருக்கும். அழகு, நடிப்பு என அனைத்திலும் அசத்துகிறார். ஜீவாவை பல காட்சிகளில் க்ளீன்போல்டாக்குகிறார். நண்பன் பட கேரக்டரின் நீட்சியாகவே படம் முழுக்க தெரிகிறார் ஜீவா. அவரது டல்லடிக்கும் மாடுலேஷன் சில பத்து கொட்டாவிகளுக்கு உத்தரவாதம். அதிலும் தவறையெல்லாம் இவர் செய்துவிட்டு, அதை சமந்தா மீது சுமத்துவது, 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே' என கமெண்ட் அடிக்க வைக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்கப் போய், அந்தஸ்து பிரச்சினையால் அவமானப்பட்டு வருகிறார் ஜீவாவின் அப்பா. அதன்பிறகு வரும் காட்சிகள் இருக்கிறதே... 'ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தே' என நம்மை நாமே கன்னத்தில் அடித்துக் கொள்ளலாம் போல அத்தனை நாடகத்தனம். ஜீவாவை விட, சில காட்சிகளில் மீசையில்லாமலும் சில காட்சிகளில் மீசையோடும் வரும் சந்தானம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனாலும் கல்லூரி மாணவராக அவரை ஏற்க முடியவில்லை. ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவருமே மகா அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பது படம் முழுக்க தெரிகிறது.
 
ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும், அந்த க்ளாமாக்ஸ் காட்சி, அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிட்டதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தாலி கட்ட 3 மணி நேரமே மிஞ்சியிருக்கும் ஒரு அதிகாலை... அழகிய (முன்னாள்) காதலி... நெஞ்சுக்குள் முட்டித் தவிக்கும் மோகத்தீ... தாங்கள் பழகிய, பாதம் பதித்த இடங்களை கடைசியாய் பார்த்துவர கிளம்புகிறார்கள்... அந்த இரண்டு மணி நேர காதல் தவிப்பை கவுதம் மேனன் படமாக்கியிருக்கும் விதம்... கொள்ளை அழகு. இந்த ரசனையை படம் முழுக்க காட்டியிருந்தால் நீதானே என் பொன்வசந்தத்தை காதலர்கள் கொண்டாடியிருப்பார்கள்!

Soruces : oneindia