Wednesday, February 8, 2012

எனக்கு நேரஞ் செரியில்ல...! - வடிவேலு




Vadivelu
எல்லோருக்குமே நேரம் சரியாக அமைய வேண்டும். இப்போதைக்கு எனக்கு நேரஞ் செரியில்ல... அரசியல் பத்தி எதுவும் பேதீங்க!, என்று கேட்டுக் கொண்டார் நடிகர் வடிவேலு.

விஜயகாந்தும், வடிவேலுவும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மிகக் கடுமையாக மோதிக்கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த் கட்சியை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு நிலைமை மோசமானது. எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

சிலர் அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என தங்களுக்கு மிரட்டல் வருவதாக சிலர் கூறினர். ஆனால் வடிவேலுவோ நான்தான் ஒதுங்கியிருக்கிறேன், என்றார்.

சமீபத்தில் அ.தி.மு.க. வுக்கும், விஜயகாந்துக்கும் தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் சமரசம் ஆகி மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக வடிவேலு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின. அ.தி.மு.க.வில் இணையப்போவதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்ல. அவரை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகளைப் பார்த்தா, கற்பனைக்கு அளவே இல்லைன்னுதான் தோணுது.

பொதுவாக எல்லாத்துக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். எனக்கு நேரஞ் செரியில்ல. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய கவனமெல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்.

நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும். வேறு ஒண்ணும் இப்போதைக்கு சொல்வதற்கில்லை," என்றார்.