தமிழ்த் திரையுலகைக் காக்க வந்த 'ஆபத்பாந்தவன்', 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மற்றும் ஒரு 'அலப்பறை'யை அரங்கேற்றியுள்ளார்.
தான் நடிக்கும் படத்திற்கு தன்னுடன் ஜோடி சேர நித்யா மேனனை அணுகியுள்ளார் சீனிவாசன். இதை சற்றும் எதிர்பாராத நித்யா மிரண்டு போய்விட்டாராம். 'பவர்' தாக்குதலில் சிக்கி அதிர்ந்த அவர் சற்றே சுதாரித்து சீனியர்களுடன் ஜோடி சேர மாட்டேன் என்று கூறி அனுப்பி விட்டாராம்.
வழக்கமாக ரசிகர்கள் தான் நடிகர்களுக்கு அடைமொழி வைப்பார்கள். ஆனால் டாக்டர் சீனிவாசனோ தனக்குத் தானே 'பவர் ஸ்டார்' என்ற வைத்துக் கொண்டு தமிழ்த் திரையுலகைக் கலாய்த்து வருகிறார். இவரது லத்திகா என்ற படம் '200 நாட்களைத் தாண்டி ஓடி' தமிழ்த் திரையுலகினரை பேரதிர்ச்சியி்ல ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் சற்றும் சளைக்காமல் அதைப் பற்றி தொடர்ந்து விளம்பரம் கொடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சீனி.
50 வயதைத் தாண்டிய இவர் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பாராம். அதுவும் ஆடி, ஓடி 'முடிந்த' நடிகைகளை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்கிறாராம். தற்போது தனது 'டேஸ்ட்'டில் சற்று மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்த சீனி, எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடிக்கிறது நாமும் 'யூத் டிரெண்டில்' தற்போதுள்ள இளம் நாயகிகளுடன் நடிக்க வேண்டாமா என்று 'புரட்சிகர' எண்ணம் அவருக்கு வந்துள்ளது.
உடனே தனது பட்டாளத்துடன் '180' பட நாயகி நித்யா மேனனை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்தும் நித்யா இவரு 'அவராச்சே', எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். உடனே சீனிவாசன் தான் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடன் ஜோடி சேருமாறும், அதற்காக ரூ. 1 கோடி வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அவர் 1 கோடி தருவதாக கூறியது கூட நித்யாவுக்கு அதிர்ச்சி தரவில்லையாம், மாறாக, கூட நடிக்குமாறு கேட்டதுதான் பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். சினிமா உலகில் வாய்ப்பு தேடி வந்தால், அது பிடிக்காவிட்டால் நேரடியாக முடியாது என்று கூற மாட்டார்கள். ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சங்காத்தமே வேண்டாம் என்று விலகி விடுவார்கள். அதே பாணியில், நாசூக்காக சீனியர் நடிகர்களுடன் நான் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட பவர் ஸ்டாருக்கு கொஞ்ச நேரம் 'பவர்' போய்விட்டது.
இருந்தாலும் வேறு வழியில்லாமல், மனதைத் தேற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். 'பவர் ஸ்டார்' முகம் பவரில்லாமல் இருப்பதைப் பார்த்த ஆதரவாளர்கள் விடுங்கண்ணே நித்யா மேனன் இல்லை என்றால் என்ன. நாம் டாப்ஸியை கேட்போம் என்று ஆறுதல் கூறியிருப்பதாக தெரிகிறது.
அனேகமாக டாப்ஸி 'டாப் கியரில்' சென்னையை விட்டு தற்காலிகமாக வேறு ஏரியாவுக்குப் பறந்து விடலாம் என்று தெரிகிறது.