புதுச்சேரி: குறைந்த விலையில் மது கிடைக்கும் என்ற பெருமையைப் பெற்ற புதுச்சேரியில் தற்போது மது வகைகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி விட்டனர். இதனால் குடிமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளனராம். தமிழகத்தில் எப்படி டாஸ்மாக் மூலம் அரசு மது விற்பனை செய்கிறதோ, அதேபோல புதுச்சேரியில் பாப்ஸ்கோ என்ற நிறுவனத்தின் மூலம் புதுவை அரசு மது பானங்களை விற்கிறது. இந்தக் கடைகளில்தான் தற்போது விலை உயர்ந்துள்ளது.
பிற மாநிலங்களை விட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்தான் மது விலை மகா சகாயமாக உள்ளது. இதனால் புதுச்சேரி மக்களை விட பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் பெருமளவில் இங்கு வந்து மது அருந்தி உற்சாகமாக இருப்பது அதிகம். தமிழகத்திலிருந்து குடிப்பதற்காகவே புதுச்சேரிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். வார இறுதி நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான குடிமக்கள் புதுச்சேரியை நாடி ஓடி வருவது வழக்கம்.
இந்த நிலையில்தான் மது பானங்களின் விலை உயர்ந்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பாட்டிலில் போட்டு விற்க ஆரம்பித்துள்ளனர். குறைந்தபட்ச விலை 2 ரூபாய், அதிகபட்சம் 30 வரை உயர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் மது விலை அதிகமாக இருப்பதால் புதுச்சேரி போய் குடிக்கிறோம், இப்போது புதுச்சேரியிலும் விலையை உயர்த்தினால் எங்கு போய் குடிப்பது என்று தங்கப்பதக்கம் பட வசன பாணியில் குடிமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.