Monday, April 7, 2014

ராஜபக்‌ஷேவின் கூட்டாளி படத்தில் விஜய்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான படம் ‘இனம்’ என்கிற சர்ச்சையே இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அடங்க ஆரம்பித்திருக்கிற நிலையில் இப்போது அதேபோல ஒரு சர்ச்சையில் வசமாக மாட்டியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’.


‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா இண்டர்நேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் கூட்டாளி என்பது தான் சர்ச்சைக்கான காரணம். அங்கு லைக்கா மொபைல் என்கிற செல்போன் சேவையை நடத்தி வரும் சுபாஷ்கரன் தான் கத்தி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர். இந்த உண்மைத் தகவல் தற்போது வெளியானதையடுத்து பணத்துக்காக இனக் கொலையாளி ராஜபக்‌ஷேவின் கூட்டாளி படத்தில் பச்சைத் தமிழர் விஜய் நடிக்கலாமா..? என பல நாடுகளிலும் தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘கத்தி’ படத்தை, ஈழத்தமிழர் நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல்தான் முதலில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் பெருசு என்பதால் அதைத் தாங்க முடியாத ஐயங்கரன் இன்னொரு ஈழத்தமிழர் நிறுவனமான ’லைக்கா மொபைல்’கம்பெனியும் இந்தப் படத்தயாரிப்பில் இணைத்தது. இது ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

ஆனால் நடிகர் விஜய்யோ, இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் சொல்லாமல் வழக்கம் போல அமைதியாக இருந்து வருகிறார்.

அப்புறம் என்ன இன்னொரு ரிலீஸ் களேபரத்துக்கு தயாராக வேண்டியது தான்.